நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் சாலையைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை கரோனா பரிசோதனை முடிவில் மாவட்ட சுகாதாரத்துறையினரால் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மயிலாடுதுறை மருத்துவமனைக்கு சென்ற அவரை காலை 9 மணியில் இருந்து மாலை வரை காத்திருக்க வைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கரோனா சிறப்பு வார்டுக்கான பட்டியலில் (லிஸ்ட்) அவரின் பெயர் வரவில்லை எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அவர் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை நகராட்சி நிர்வாகத்தினர் அந்த நபரின் வீட்டிற்குச் சென்று கிருமிநாசினி தெளித்து அவர் தெருவை சுத்தப்படுத்தினர். இதையடுத்து அவராகவே கிளம்பி மறுபடியும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மீண்டும் அதே பதில் மருத்துவமனை நிர்வாகத்தால் கூறப்பட்டு அவர் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். காலை முதல் நின்று கொண்டிருந்த நபரை மாலை 3.30 மணிக்கு மருத்துவமனை நிர்வாகம் அழைத்துச் சென்று கரோனா வார்டில் சேர்த்தது.