தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் - நாகை எம்எல்ஏ - மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ
நாகை: தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கரோனா நெருக்கடியில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தவர்களில் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் அடங்குவர். அவர்களின் வருவாய் இழப்பு ஒருபுறமெனில், இதைச் சார்ந்த தொழிலாளர்களின் நிலையும் பரிதாபமாக இருக்கிறது.
ஒரு பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள், இரண்டு பணியாளர்கள், கட்டணம் பதிவு செய்யும் முகவர்கள் எனக் கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கானவர்கள் இதனால் வாழ்வாதாரங்களை இழந்துள்ளதை அறிய முடியும்.
தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்கிட அரசு அனுமதியளித்துள்ள நிலையில், வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிவரை வாகனங்களை இயக்க முடியாத நிலையுள்ளது என்று அவர்களது சங்கம் அறிவித்துள்ளது.
இது ஏன்? என்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். 5 மாதங்கள் முழுமையாக ஆம்னி பேருந்துகள் இயங்காத நிலையில், அவர்களால் சாலை வரியை எப்படி செலுத்த இயலும்?
தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், கரோனா நெருக்கடி கால கட்டத்தில் மட்டும் 25 முறை பெட்ரோல்-டீசல் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இந்த நிலையில் தற்போது சமூக இடைவெளியுடன் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது.
எனவே 6 மாதங்களுக்கான சாலை வரியில் விலக்கு அளிப்பது, காப்பீட்டு கட்டணத்தை செலுத்த 6 மாத கால அவகாசம் அளிப்பது என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
சீரான பொதுப் போக்குவரத்தையும், பயணிகளின் நலனையும் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு இவ்விஷயத்தில் செயல்பட வேண்டியது அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்" என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.