கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் கடைகளைத் திறக்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வணிகர் சங்க பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், வணிகர் சங்கத் தலைவர் செந்தில்வேல், துணைத் தலைவர் மதியழகன், அனைத்து வணிகர் சங்க பொறுப்பாளர்கள், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வணிக நிறுவனங்கள் இரவு எட்டு மணிக்கு கடைகளை மூடுவதற்குப் பதிலாக மாலை ஆறு மணிக்கே மூடுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்படும் என்றும், மற்ற நாள்களில் (வரும் 30ஆம் தேதி வரை) இரவு ஏழு மணிக்கு கடைகள் மூடப்படும் என்றும் மயிலாடுதுறை வணிகர் சங்கத் தலைவர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நகரில் டாஸ்மாக் கடைகளை மூடினால் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தருவதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர்.