நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மேலையூரைச் சேர்ந்த விவசாயிகள் 2016-17, 2017 - 18ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்தனர்.
இந்நிலையில், மேலையூரைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து கருவறை மேலையூர் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காப்பீடு செய்த மேலையூர் விவசாயிகளுக்கு இதுவரை காப்பீட்டுத் தொகை கிடையாது என்று கூறுவதாகவும், உடனடியாக காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
செம்பனார்கோவில் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் பூம்புகார் மயிலாடுதுறை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.