நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் அடுத்த பத்து தினங்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நாகப்பட்டினம் ஆட்சியர் பிரவீன் பி நாயர் கூறும்போது, "தினம்தோறும் சராசரியாக 100 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. கரோனா பரவல் அதிகமாகி வருவதால் கடந்த சில வாரங்களில் தினசரி 30 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
தொற்று அதிகமாக உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கீழ்வேளூர், சீர்காழி நகராட்சி பகுதிகள் மற்றும் மயிலாடுதுறை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் தற்போது தொற்று எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ளது. இந்த பகுதிகளில் அறிகுறி வந்த பின் மருத்துவமனைகளுக்கு வருவதை தவிர்க்கும் விதமாக, மருத்துவக் குழுவினர் நேரடியாக சென்று பரிசோதனை செய்கின்றனர்.
தற்போது ஐந்து கோவிட் கேர் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. எண்ணிக்கை அதிகரிப்பதால் தொடர்ந்து நாகை மற்றும் சீர்காழியில் கூடுதல் சிகிச்சை மையம் ஏற்படுத்தபடவுள்ளது. நோயாளிகளை மூன்று விதமாக பிரித்து, நோய் தன்மை தீவிரமாக உடையவர்களை நாகை, மயிலாடுதுறை மருத்துவமனைகளிலும், அறிகுறிகள் குறைவாக காணப்படும் நபர்கள் சீர்காழி, வேதாரண்யம் மருத்துவமனைகளிலும், அறிகுறிகள் மிக குறைவாக தென்படும் நபர்களை கோவிட் கேர் சென்டரிலும், முற்றிலும் அறிகுறி இல்லாத நபர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர்" என்றார்.