நாகப்பட்டினம் மாவட்டம் அருகேயுள்ள அக்கரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (35). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவந்தார். தற்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோ ஓட்டச் செல்லாமல் தனது நண்பர்களுடன் வெளியில் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர். அப்போது, ராஜா புத்தூர் அருகேயுள்ள கருவேலன் காட்டில் மதுபாட்டில்களால் கழுத்து அறுக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் கொலைசெய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.