மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட 14 வேட்பாளர்களில் நாம் தமிழர் கட்சியின் மாநில சுற்றுச்சூழல் பாசறை துணை தலைவரான காசிராமனும் ஒருவர். இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்கு சேகரித்தவர். மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை ஊராட்சியில் தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்றபோது, ஸ்டாலின் நகரில் வசிக்கும் 14 குடும்பத்தினர், அடிப்படை வசதி செய்து தராமல் வாக்கு கேட்க மட்டும் ஏன் வருகிறிர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு முந்தைய தேர்தலில் இப்பகுதியில் வாக்கு கேட்டு, வாக்குறுதிகள் தந்துவிட்டு போன யாரும் தேர்தலில் ஜெயித்த பிறகு தங்கள் பகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தரவில்லை. தங்கள் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரவில்லை. இப்பகுதியில் வசிக்கும் 14 குடும்பத்தினருக்கு இதுவரை மின்சார வசதி இல்லை. குழந்தைகள் தெரு விளக்கு வெளிச்சத்தில்தான் படிக்கின்றனர். இரவு நேரத்தில் தேள், பூரான் போன்ற பூச்சிகள் குழந்தைகளை கடித்துவிடுவதால் கடும் இன்னலுக்கு ஆளாகின்றோம் என்று குற்றம் சாட்டினர். அவர்களிடம் வேட்பாளர் கி.காசிராமன், தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன், அதில் வெற்றிபெற்றாலும், தோல்வி அடைந்தாலும் 14 குடும்பத்தினருக்கும் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் விளக்குகளை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிவு தெரிவதற்கு முன்னரே இன்று மாப்படுகை ஸ்டாலின் நகரில் மின்சார வசதியின்றி குடியிருக்கும் பவானி, முத்துகிருஷ்ணன், கவியரசி உள்ளிட்ட 14 குடும்பத்தினருக்கு சோலார் விளக்குகளை வாங்கித் தந்தார்.