மயிலாடுதுறை: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த வகையில், மூன்றாம் வார ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை முன்னிட்டு, மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி அலுவலர்கள் காலை முதல் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில், மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கீழவீதியில் உள்ள இறைச்சிக்கடை ஒன்றில் நாள்பட்ட ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சைமுத்து, டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட அலுவலர்கள், அக்கடையில் நான்கு நாள்களான ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதைக் கண்டறிந்தனர்.
ஆட்டு இறைச்சி மற்றும் குளிர்பதனப் பெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலர்கள், அக்கடைக்கு சீல் வைத்ததுடன், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், ஊரடங்கு நாளில் இயங்கிய தேநீர்க்கடையில் கேஸ் சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு - கால அட்டவணை வெளியீடு