மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்த பருவம் தவறிய தொடர் மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 70,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்களில், சுமார் 34,000 ஏக்கர் நெற்பயிர்கள் வயலோடு சாய்ந்து சேதமடைந்தன. அதேநேரம் மழைநீர் வயலில் தேங்கி நின்றதால், பல்வேறு இடங்களில் நெற்பயிர்களும் முளைக்க தொடங்கிவிட்டது.
மேலும், மாவட்டம் முழுவதும் சுமார் 51,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, பயறு வகை பயிர்களில் சுமார் 38,000 ஏக்கர் பயிர்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டு சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், நேற்று (பிப்.5) பயிர் சேத பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
அமைச்சர் தலைமையில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் இயக்குனர் அண்ணாதுரை ஆகிய அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவினர், மயிலாடுதுறை வில்லியநல்லூர் அருகே நாராயணமங்கலம் என்ற இடத்தில் ஆய்வு செய்தனர். பயிர் சேதங்கள் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.