மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா, திருவாவடுதுறை மேலக்கடை முடுக்குத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பார்த்திபன். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் நரசிங்கன்பேட்டையை சேர்ந்த செல்லதுரை மகள் செல்வகுமாரியை (24) காதலித்து, இருவரது பெற்றோர் சம்மதத்துடன் 2019ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு லிவிஷா என்ற ஒன்றேகால் வயது பெண் குழந்தை உள்ளது. அவசரமாக திருமணம் நடைபெற்றதால் செல்வகுமாரிக்கு 3 பவுன் நகை மட்டுமே அவரது பெற்றோர் போட்டுள்ளனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாக பார்த்திபனின் தாயார் தனலட்சுமி தனது மருமகள் செல்வகுமாரியிடம் 30 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் செல்வகுமாரியின் தந்தை செல்லதுரைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கேட்ட வரதட்சணையை உடனடியாக கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச்16) மாலை செல்வகுமாரி பெற்றோரிடம் பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்17) காலையும் செல்வகுமாரி வாசல் தெளித்து கோலம் போட்டதை, அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.