கொசு மருந்து இயந்திரம் வெடித்து நகராட்சி ஊழியருக்கு தீக்காயம்
நாகப்பட்டினம்: கொசு மருந்து இயந்திரம் திடீரென வெடித்ததால் நகராட்சி ஊழியருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருவதால், நாகப்பட்டினம் நகராட்சிக்குள்பட்ட 36 வார்டுகளிலும் கொசுத் தொல்லை அதிகம் இருப்பதாகப் பொதுமக்கள் ஆணையருக்கு புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று (அக்டோபர் 28) நாகப்பட்டினம் நகராட்சி ஊழியர்கள், டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 16ஆவது வார்டு சங்கரவிநாயகர் மேல்சந்து பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நகராட்சி ஊழியர் இயந்திரத்தினால் கொசு மருந்து அடித்தபோது, கொசு மருந்து இயந்திரம் திடீரென தீப்பற்றி வெடித்தது.
இந்த விபத்தில் கொசு மருந்து இயந்திரத்தை இயக்கிய நகராட்சி ஊழியருக்கு முகம், மார்பு பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் முதலுதவி சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துமனைக்கு சக ஊழியர்களால் கொண்டுசெல்லப்பட்டார். தீக்காயம்பட்ட நகராட்சி ஊழியருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட கொசு மருந்து இயந்திரத்தை நகராட்சி நிர்வாகம் முறையாகப் பராமரிக்காததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக டெங்கு கொசு ஒழிப்பில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.