மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திறந்த வாகனத்தில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தொடர்ந்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அப்போது, “காமராஜருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அனைவருமே சினிமாக்காரர்கள்தான். ஒருவரைத் தவிர. நான் யாருக்கும் அடிமை இல்லை நான் யாருக்கும் அரசன் இல்லை. தமிழ்நாடு கடன் வாங்குவதில் முதலிடம் வைக்கிறது. கல்வி பட்ஜெட் ஒரு மாணவனுக்கு 45 ஆயிரம் ரூபாய் வருகிறது. ஆனால் பள்ளிகள் தரமானதாக இல்லை.
சாகாமலேயே நரகத்தை பார்க்க வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றாலே போதுமானது. பள்ளிக்கூடங்களை அவசர அவசரமாக மூடிவிட்டு, சாராயக் கடைகளை திறக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் சம்பவங்களில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது இடம் வகிக்கிறது.