மயிலாடுதுறை: கல்வி தொலைக்காட்சி கண்டு அதன்மூலம் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவி பிரியதர்ஷினிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் உதவித்தொகை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி வையாபுரிதிடல் பகுதியை சேர்ந்தவர் யோகநாதன். இலங்கை தமிழரான பட்டியலின வகுப்பைச் சேர்ந்த யோகநாதனுக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார்.
இவர் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடம் பெற்றார். நீட்தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் 494 இடத்தை பிடித்துள்ளார். மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவருகிறார்.
இதனால் எவ்வித திறன்வளர்ப்பு மையங்களுக்கும் செல்லாமல், வீட்டில் கைப்பேசியும் இல்லாத சுழலில், வீட்டிலேயே இருந்த ஒரே வழியான கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை கவனித்து படித்து, நீட்தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் அடைந்துள்ளார். தாயகம் திரும்பியோருக்கான இடஒதுக்கீடுமற்றும் பட்டியலின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் தனக்கு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் பிரியதர்ஷினி.
இச்சூழலில், கல்வி தொலைக்காட்சி வாயிலாக படித்து நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த பிரியதர்ஷினிக்கு சால்வை அணிவித்து பாராட்டிய மயிலாடுதுறை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், கல்வி உதவித் தொகையாக ரூ.10ஆயிரத்தையும் வழங்கி கெளரவித்தார்.