திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாகை மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான அமிர்த விஜயக்குமார் திமுகவில் இணைந்தார்.
அவருடன் பாஜக, அஇஅதிமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களை வரவேற்று திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்த விஜயகுமார் தலைமையில் பா.ஜ.க. மற்றும் மாற்று இயக்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நாடு எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அது தெரிந்ததால்தான், மக்களை திமுகதான் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்தோடு நீங்கள் திமுகவில் இணைந்திருக்கிறீர்கள்.