மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் ஒரு வார காலப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று (செப்.27) நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் கறுப்பு முகவசங்களுடன் வயலில் இறங்கி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினர்.
இப்போராட்டத்தின்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனக் கோரியும் கண்டன முழக்கங்களை கட்சியினர் எழுப்பினர். மேலும், இப்போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதி விவசாயிகளும் கலந்துகொண்டு வேளாண் மசோதாக்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, "ஆளும் அதிமுக அரசு வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கான ஆதரவு நிலைப்பாட்டை, விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மாற்றிக்கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.