மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப்யாதவ், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த கூட்டத்தில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘சாலை விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஓட்டுனர் உரிமம் வழங்கும்போது முறையாக தேர்வு செய்து உரிமம் வழங்க வேண்டும்.
பஸ்களில் படிகளில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் செல்வதை தவிர்க்க காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாலை விதிமுறைகளையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
சென்னையில் சாலை விபத்துகள் 13 சதவிகிதம் நடக்கிறது ஆனால் சிறிய மாவட்டமான மயிலாடுதுறையில் 17 சதவிகிதம் சாலை விபத்துகள் நடக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைவாக நடக்கும் முதல் மூன்று இடங்களை பெறும் மாவட்டங்களுக்கு தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் விபத்து குறைவாக நடக்கும் மாவட்டமாக இடம்பெற அனைத்துத்துறை அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும்’ என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, ‘தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாலை தரத்தை உயர்த்த அரசு பணியாற்றி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநில நெடுஞ்சொலை 160 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை 178 கி.மீ, மாவட்ட இதர சாலைகள் 471 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை 46 கி.மீ. என்று மொத்தம் 855 கி.மீ. சாலைகள் உள்ளது.