மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு இந்த வருடம் முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.இதை முன்னிட்டு கழகத்தின் மூத்த முன்னோடி உறுப்பினர்களுக்குப் பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாமயிலாடுதுறையில் நடைப்பெற்றது.இவ்விழா மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் திமுக மூத்த முன்னோடி உறுப்பினர்கள் ஆயிரம் பேருக்குப் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொற்கிழியை வழங்கினார்.மேலும் மாற்றுத்திறனாளி 60 நபர்களுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்குத் தையல் மிஷின் இயந்திரங்களை வழங்கி சிறப்பித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மேடையில் பேசுகையில்: "நான் சென்னையில் பிறந்தேன். என்னுடைய தாய் மாவட்டம் மயிலாடுதுறை.கடந்த சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்தின் போது என் பிரச்சார வாகனத்தைத் தடுத்து நிறுத்தி என்னைக் கைது செய்ததும் மயிலாடுதுறையில் தான்.திமுக தலைமையிலான முதல்வர் ஆட்சி மக்களுக்குச் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதைப் பொறுக்க முடியாத ஒன்றிய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் அமலாக்கத்துறை,வருமான வரித்துறை, சிபிஐ மூலம் திமுக அரசை பயமுறுத்தி வருகின்றனர்.நாங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைச் சந்தித்தவர்கள் மேலும் அமலாக்கத்துறை மற்றும் மோடி இவர்களைப் பார்த்துப் பயப்படமாட்டோம் என்றார்.