தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நரிக்குறவ சமுதாயப் பெண் ஆசையாக அணிவித்த பாசிமணியை உடனே கழற்றிய அமைச்சர் உதயநிதி! - ஆளுநர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சர் உதயநிதியை வாழ்த்தி அணிவித்த பாசிமணியை உடனே கழற்றி உதவியாளரிடம் கொடுத்த சம்பவம் பார்வையாளர்கள் இடையே அதிருப்தியில் ஆழ்த்தியது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 22, 2023, 10:38 AM IST

நரிக்குறவ சமுதாயப் பெண் ஆசையாக அணிவித்த பாசிமணியை உடனே கழற்றிய அமைச்சர் உதயநிதி!

மயிலாடுதுறை: தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் துறை பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, 4675 பயனாளர்களுக்கு ரூ.34 கோடியே 65 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் இலவச தையல் இயந்திரம், சலவைப் பெட்டி மற்றும் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு சாதிச் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சர் உதயநிதியை வாழ்த்தி பாசிமணியை அணிவித்தார். சிறிது நேரத்திலேயே அந்த பாசி மணியை கழற்றி உதவியாளரிடம் கொடுத்த சம்பவம் பார்வையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி பேசுகையில், ”தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட திட்டங்களையும், வாக்குறுதியில் குறிப்பிடாத திட்டங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இதையும் படிங்க: "சாதாரண கிளை செயலாளரைக் கூட தொட முடியாது" - மத்திய அரசுக்கு அமைச்சர் உதயநிதி சவால்!

இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டு மாநிலமாக நம்முடைய தமிழகத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கான திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றும், பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் மூலம் இந்த இரண்டு வருடங்களில் 300 கோடி பயனாளர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

தொடர்ந்து உங்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் நிறைவேற்றிக் கொண்டே இருக்கும் உங்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு திகழும்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முகவர்கள் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் ஆளுநரை விமர்சித்து, ’ஆளுநர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அவர் நாம சொல்ற இடத்துல கையெழுத்து போட வேண்டும்' என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அமைச்சர் உதயநிதி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: ஆளுநர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி.. - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details