Erode East By-Election:ஈரோடு இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி திமுக கூட்டணிக்கே! - அமைச்சர் மெய்யநாதன் மயிலாடுதுறை நகரிலுள்ள சேவை சங்கங்களின் சார்பிலான இதய சிகிச்சைக்கான மருத்துவ முகாமை (Cardiovascular Medical Camp) சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஜன.29ல் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, பாரத சாரண சாரணியர் மாணவர்களுக்கான பயிற்சி முகாமை பார்வையிட்டு மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அரசு நெல் கொள்முதல் நிலையங்கள்:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த மருத்துவ முகாம் வாயிலாக கண்டறியப்படும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் 'கலைஞர் காப்பீடு' திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை அளிக்கப்படும். தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரும் சம்பா, தாளடி பயிர்களை கொள்முதல் செய்ய 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு 85 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும்.
விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திற்கு மக்கள் எளிதாக செல்லும் வகையில் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கண்டிப்பாக புறவழிச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
பழுதான கட்டடங்கள் அகற்றப்படும்: தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டடம் ஒரு பகுதி இடிந்து விழுந்து அபாயகரமாக உள்ள கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், 'எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இரு தினங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
30-க்கும் மேற்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. சீர்காழி தாலுகா பனங்குடி கிராமத்தில் அரசு பள்ளிக்கான கட்டடங்கள் இல்லாத நிலையில் உடனடியாக வகுப்பறை கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது' என்றார்.
இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி:மேலும் பேசிய அவர், 'ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளதால் ஈரோடு சட்டமன்ற ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் (Erode East By-Election) திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவின் கொள்கை என்ன?.. ஈரோடு தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.. அன்புமணி