மயிலாடுதுறை:காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழையால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் எளிதாக முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து, சீர்காழி அருகே கரையோரப்பகுதிகளான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல் கோரத்திட்டு ஆகியப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அங்கு வெள்ளத்தால் தவிக்கும் அப்பகுதியினரை வருவாய்த்துறையினர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ள நிலையில் இன்று (ஆக.31) அவர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் குறைகளைக் கேட்டறிந்தார். அத்துடன் மக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, உள்ளிட்ட உதவிகளை செய்ய மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் அறிவுறுத்தினார்.