இன்று நாகையில் சமூகநலத்துறை சார்பில் ஏழை பெண்கள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு கைத்தறித் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், தலைஞாயிறு, திருமருகல், கீழையூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரத்து 343 பயனாளிகளுக்கு 9 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தாலி, திருமண உதவி தொகையினை கைத்தறித் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன், 'அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் விரைந்து பணிக்கு திரும்புவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு காவிரி நீர் பெறுவதில் சட்ட வரையறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட சிக்கல் ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடும் என்று கூறினார்.