வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்வதால், நாகை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி புயல் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் இன்று (நவ. 23) தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரண்யம், புஷ்பவனம், செருதூர், நம்பியார் நகர், நாகூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற அவர் மீனவர்களை, அவர்களது படகுகளை மேடான பகுதிகளுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். மேலும் புயல் வீசக்கூடிய நேரத்திற்கு முன்னதாக விவசாயிகள், தாழ்வான குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் ஆகியோர் புயல் பாதுகாப்பு கட்டடங்களுக்குச் செல்ல வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.