நாகப்பட்டினம்:தமிழ்நாடு முதலமைச்சரின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலர் வெளியீட்டுவிழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 382 பயனாளிகளுக்கு ரூ.6.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கூறுகையில், “திமுக ஆட்சி அமைந்தபிறகு ரூ.114 கோடி மதிப்பீட்டில் 7 மாடிகொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ரூ. 24 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ. 46 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பூம்புகார் சுற்றுலாமையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் ஆற்றில் அலக்குடி பகுதியில் கரையை பலப்படுத்தும் பணிகளும், புயல்பாதுகாப்பு மையம் அமைகப்படவுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அனைத்து வசதிகளும் மேம்படுத்திகொடுக்கப்படும். புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.