மயிலாடுதுறை:குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (ஜனவரி 27) தொற்று நோய் சிகிச்சை பெறுவதற்கான 3.65 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தலா 25 லட்சம் மதிப்பீட்டில் அளக்குடி மற்றும் கோமல் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டடத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார்.
அதோடு தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 46.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டமைப்புடன் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர், தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீ திமன்றம் நீக்கி உள்ள நிலையில் இது குறித்து முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.
கரோனா பாதிப்பு பின் ஏற்படும் பாதிப்புகளை உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இதனிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் மாரடைப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா, எம்.பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பிபிசியின் மோடி ஆவணப்படம்: தடையை மீறி சென்னை பல்கலை. வளாகத்தில் பார்த்த மாணவர்கள்