புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (டிச.11) நேரில் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், வேட்டங்குடி, வழுதலைகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட அவர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “மயிலாடுதுறை மாவட்டம் நிவர், புரெவி புயல்களால் பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மழையால் சீர்காழி கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. விளை நிலங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. அறுவடைக்கு தயாராகி இருந்த பயிர்கள் அழுகிவிட்டன. அதே போல, வீடுகளுக்கு தண்ணீர் சூழ்ந்து மக்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை அரசு அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிடவில்லை. பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை நேரில் சென்று பார்வையிடாமல், அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு ஆய்வுக்கூட்டம் நடத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பாதிக்க வேளாண் நிலங்களை நேரில் பார்வையிடாமல் சென்னையில் உட்கார்ந்துகொண்டு அலுவலர்கள் கூறுவதைக் கேட்டு, தலையசைத்து கொண்டிருக்கிறார். அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டால் மட்டுமே பாதிப்பின் முழு விவரம் தெரிய வரும். இல்லையென்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காமல் போய்விடும். அவர் உடனடியாக புயல் மழையால் கடுமையாக பாதிப்படைந்த டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் வந்து பார்வையிட வேண்டும்.
மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வாழைக்கு ரூ.50 ஆயிரமும், இதர பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தாலே தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். வீடு இடிந்தால் மட்டுமே நிவாரணம் என்று சொல்லக்கூடாது.
சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வறட்சி, புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் கோரும் தமிழ்நாடு அரசு கோரும் நிதியில் வெறும் 10 % மட்டுமே வழங்குகிறது. புயல், மழை பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். அந்த தொகையை முழுமையாக பெற தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், வடிகால் வசதிகளை மேம்படுத்தி நீர்நிலைகளை தூர்வாரி மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் விளை நிலங்களை பாதுகாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க :'விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கப்படும்' - அமைச்சர் காமராஜ்