மயிலாடுதுறை: திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவில், மயிலாடுதுறை நகர திமுக சார்பில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு, “கோயிலில் கட்டடம் முதல் கலசம் வரை அனைத்தையும் நம்மவர்கள் தான் கட்டுகிறார்கள். தமிழைப் பற்றித் தெரியாதவர்கள் மற்றும் இனம் புரியாதவர்கள் கோயிலில் யாகசாலை அமைத்து, 48 நாட்கள் நமக்கே புரியாதவற்றை எல்லாம் சமஸ்கிருதத்தில் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள கடவுள்களுக்கு தமிழ் தானே பிடிக்கும், சமஸ்கிருதமா பிடிக்கும்? சமஸ்கிருதத்தில் கடவுளிடம் ஏதேதோ சொல்லி, கடைசியில் கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்தைச் செய்த நபர்களையே தொட்டுப் பார்க்க விடாமல், அதன் மீது தண்ணீரைக் கூட அவர்கள்தான் ஊற்றுகிறார்கள்.
அந்த தண்ணீரை அனைவரும் ஊற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தினை திராவிட மாடல் அரசு கொண்டு வந்தது. ஆகம விதிகளை நானும் படித்துதான் வந்துள்ளேன். எந்த ஆகம விதிப்படி, டிக்கெட் கொடுத்தால்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என உள்ளது?
பெயர், குலம் மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றைக் கேட்டு அர்ச்சனை செய்வது எந்த ஆகம விதியிலும் இல்லை. இவை அனைத்தும் சுயநலத்திற்காகச் செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.