மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த அறிவு என்ற தனியாருக்குச் சொந்தமான சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. அரசு அனுமதி உடன் மணல் குவாரி நடத்தும் குத்தகைதாரர், விதியை மீறி பல அடி ஆழத்தில் மணல் அள்ளுவதாகவும், இந்த மணல் குவாரியால் மேலபெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் மற்றும் தலைச்சங்காடு போன்ற அருகில் இருக்கும் பதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அது மட்டுமல்லாமல், கடற்கரையை ஒட்டி உள்ள இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் வாய்க்காலில் கரை மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மணல் குவாரியில் ஐந்து ஹிட்டாச்சி இயந்திரங்ள் உடன், சுமார் ஒன்றரை மாதங்களாக மண் எடுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதேநேரம் நாள் ஒன்றுக்கு, கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட லாரிகளில், 200 முறைக்கு மேல் மண் ஏற்றிச் செல்வதாகவும், இதனால் சாலையில் புழுதி பறந்தும், இரவு நேரங்களில் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், இந்த குவாரியில் மண் எடுக்கும் பள்ளத்தில் ஆடு, மாடுகள் விழுந்து இறந்து போவதும் வாடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் வேதனை உடன் கூறுகின்றனர். தொடர்ந்து இந்த மண் குவாரியில் எடுக்கப்படும் மண், விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளுக்கு மண் எடுப்பதாக குவாரி தரப்பில் கூறப்படும் நிலையில், தனியாருக்கும் இந்த மண் விற்பனை ஆவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.