நாகை மாவட்டத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மருத்துவக் கல்லூரி அமைவதற்கான இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.
ஆனால், மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாகையில் இந்திய வர்த்தகர் தொழிற் குழுமம் சார்பில் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று 24 மணிநேர முழு கடையடைப்பை காலை முதல் தொடங்கினர்.
இந்த கடையடைப்பு நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திட்டச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழு அளவில் அடைக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து, மீனவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.