தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல் - உரிமையாளர் கைது!

Firecracker godown accident at Mayiladuthurai: தில்லையாடி கிராமத்தில் வெடி குடோனில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்ததையடுத்து, அரசு போதிய நிவாரணம் அறிவிக்கவில்லை எனக் கூறி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்.. உரிமையாளர் கைது
மயிலாடுதுறை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்.. உரிமையாளர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 1:47 PM IST

மயிலாடுதுறை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்.. உரிமையாளர் கைது

நாகப்பட்டினம்:மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்குச் சொந்தமான ராமதாஸ் ‌ஃபயர் ஒர்க்ஸ் என்ற வானவெடி தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனமானது 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு நாட்டு வெடிகள் உள்பட கோயில் விழாக்கள், திருமணத்திற்குத் தேவையான வானவெடிகள் ஆகியவையும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு வானவெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த தொழிற்சாலையில் 11 பேர் வேலை பார்த்து வந்த நிலையில் சேமிப்பு கிடங்கு, தயாரிக்கும் இடம், மருந்து கலக்கும் இடம் என தனித்தனியாக உள்ளது.

இந்நிலையில், வெடி குடோனில் வெடி தயாரிக்கும் பணியில் 8 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. இதனால், சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பலத்த வெடி சத்தம் கேட்டதுடன், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியுள்ளது.

இந்த விபத்தில் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். கை, கால், தலை மற்றும் உடலில் உள்ள பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை சிதறியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள், விபத்து ஏற்பட்ட இடத்தில் மேலும் வெடி வெடிக்காமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இறந்தவர்களின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு சென்றனர். மேலும், சிதறிக்கிடக்கும் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொறையார் போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வெடி விபத்தில் தரங்கம்பாடி தாலுகா கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் (32), மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த மதன்(22), கல்லூரி மாணவன் நிகேஸ் (21), ராகவன் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்த மங்கைமடம் பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி, கடலூர் மாவட்டம் முட்லூரைச் சேர்ந்த மாசிலாமணி, நாகப்பட்டினம் மாவட்டம் பொய்யூரைச் சேர்ந்த மாரியப்பன், தில்லையாடி பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் ஆகிய நான்கு பேரும் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "கெஞ்சிப் பார்த்தேன் கேட்கல அதான் கொன்னுட்டேன்.. என்னை தூக்துல போடுங்க" - நெல்லை இளம்பெண் கொலையில் கைதான சிறுவன் கதறல்!

வெடி தயாரிக்க போடப்பட்ட இரும்பு சீட், கொட்டகை கட்டடம் ஆகியவை இடிந்து செங்கற்கள் 100 மீட்டர் தூரம் வரை சிதறிக் கிடக்கின்றது. மேலும் சிமெண்ட் சீட் நொறுங்கி கிடக்கிறது. இந்த சம்பவம் குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். வெடிக்கடையின் உரிமையாளர் மோகன் என்பவரை போலீசார் பொறையார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

2008 இல் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை உரிமத்துடன் இயங்கி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாகை எஸ்பி ஹர்ஷ் சிங் கூறுகையில், “தில்லையாடி வெடி மருந்து தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக உரிமையாளர் மோகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த ஆலை 2023 முதல் 2026 வரை செயல்பட அரசு அனுமதி வழங்கி உள்ளது. மருந்து மிக்சிங் செய்யும்போது தீ பரவி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இக்கோரச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. இறந்தவரின் உடல்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு வந்த இறந்தவர்களின் குடும்பத்தினர் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மருத்துவமனை அருகே உள்ள மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு போதிய நிவாரணம் அறிவிக்கவில்லை என்றும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அதிக அளவில் வெடி தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு உரிமம் வழங்கிய அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து பொறையார் போலீசார் இந்திய குறியீடு வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, வெடிக்கிடங்கு உரிமையாளர் மோகனை கைது செய்து சிறையில் அடைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் பைனான்சியர் வெட்டி கொலை!

ABOUT THE AUTHOR

...view details