மயிலாடுதுறை:குத்தாலம் தாலுகா, மங்கநல்லூரை அடுத்த தத்தங்குடி கிராமத்தில் பழனிகுருநாதன் மற்றும் பூராசாமி ஆகிய இரண்டு பேர் டாஸ்மாக் மது அருந்தியதில் நேற்று முன்தினம் (ஜூன் 12) உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், நேற்று (ஜூன் 13) உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் கொண்டு செல்லப்பட்டது.
இதில், அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட டாஸ்மாக் மது பாட்டில்களை தடய அறிவியல் மருத்துவ நிபுணர் குழு சோதனை செய்தது. இதில், மது பாட்டிலில் சயனைடு விஷம் கலக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்து இருந்தார். ஏற்கனவே, சந்தேக மரணம் என்று காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி மங்கைநல்லூர் பகுதியில் பழனிகுருநாதன் வீட்டின் அருகே உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சியர் பொய்யான செய்தியை பரப்புவதாக கண்டன முழக்கமிட்டனர்.
இதனால் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் சில மனி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் யுரேகா, டிஎஸ்பி சஞ்சீவ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, போராட்டம் நீடித்த நிலையில், இருவரது குடும்பத்துக்கும் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், அவரது சொந்த நிதியில் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
இதையும் படிங்க:"அண்ணாமலை தான் இதயக்கனி, அதிமுகவினருக்கு பொறாமை" - சொல்கிறார் கரு.நாகராஜன்