மயிலாடுதுறை: பட்டவர்த்தி, தலைஞாயிறு பேருந்து நிறுத்த பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டு, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் அசம்பாவிதங்களை தடுக்க பிரச்னை ஏற்பட்ட இடத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் அவரது உருவப்படம் வைத்து கூட்டம் கூடாமல் நிகழ்ச்சி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதுதொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் பட்டவர்த்தி, நடராஜபுரம், தலைஞாயிறு, ஆதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் அம்பேத்கர் படம் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தெரிவித்தனர்.