மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேகரிக்கும் கழிவுநீர், பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் நகராட்சியில் இருந்து அருகாமையில் உள்ள தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி ஊராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து எழுந்து வரும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாதாளச் சாக்கடை குழாயில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் திடீரென பள்ளம் ஏற்படும் எனவும், இதனால் விபத்துகள் நடைபெறுகின்றது என்று கூறுகின்றனர்.
மேலும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த சுத்தகரிப்பு நிலையம் செயல்படாத காரணத்தால், கழிவுநீர் அருகாமையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் நேரடியாக திறந்து விடப்படுகிறது எனவும், இதன் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், பல்வேறு நோய் தொற்றுகளுக்கு பொதுமக்கள் ஆளாகி அவதிக்குட்படுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும், இப்பகுதி ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துலட்சுமி ராஜசேகரன், செம்பனார்கோவில் ஒன்றியக் குழு கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியும், இப்பகுதி மக்கள் மூன்று முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.