தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் திருக்கொடியேற்றம்!

mayiladuthurai mayuranathaswami temple: உலக பிரசித்தி பெற்ற துலா உற்சவ திருவிழாவையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கொடியேற்ற விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

மாயூரநாதர் கோயில் நடைபெற்ற துலா உற்சவ கொடியேற்றம்
மாயூரநாதர் கோயில் நடைபெற்ற துலா உற்சவ கொடியேற்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 8:37 PM IST

மாயூரநாதர் கோயில் நடைபெற்ற துலா உற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறை: பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள் தங்களது பாவச்சுமைகளை நீக்க சிவபெருமானிடம் பிரார்த்தித்ததாகவும், அதற்கு காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி தங்களது பாவங்களை போக்கிக் கொள்ள சிவபெருமான் வரம் அளித்தாகவும், அதன் பிறகு புண்ணிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி தங்கள் பாவச்சுமைகளை போக்கிக்கொண்டதாக மக்களால் நம்பப்படுகின்றது.

அந்த வகையில் ஆண்டுதோறும், ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு, காவிரி நதிக் கரையில் எழுந்தருளி, துலா உற்சவம் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான துலா உற்சவத்தில் முதல் தீர்த்தவாரி இன்று (நவ.7) காவிரி துலாக்கட்டத்தில் துவங்கியது.

அதனை அடுத்து தினந்தோறும் மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. மேலும் அமாவாசை தீர்த்தம், திருக்கல்யாணம், திருத்தேர், கடைமுக தீர்த்தவாரி, முடவனுக்கு காட்சி தந்து தீர்த்தம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி பாகம்பிரியாள் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்..!

இந்நிலையில், இந்த ஆண்டு துலா உற்சவத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நடைபெற உள்ள 10 நாள் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்திலும் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருள கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.

கொடியேற்ற விழாவை முன்னிட்டு, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பஞ்ச மூர்த்திகளுக்கான கொடிகள் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வில் திருவாவடுதுறை ஆதின கட்டளை வேலப்ப தம்பிரான் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள இந்த பத்துநாள் உற்சவத்தில், வருகின்ற 11ஆம் தேதி மாலை மயிலம்மன் பூஜையும், 13ஆம் தேதி நன்பகல் அமாவாசை தீர்த்தவாரியும், 15ஆம் தேதி தேரோட்டம், 16ஆம் தேதி புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. பின்னர் இறுதியாக கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (நவ.17) முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் நவ.9ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் கூறுவதென்ன?

ABOUT THE AUTHOR

...view details