நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லும், பாதாளச் சாக்கடைக் குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் 20 அடி ஆழத்திற்குத் திடீர் பள்ளம் ஏற்படுவது தொடர் கதையாகி உள்ளது.
இதனால் பாதாளச் சாக்கடை கழிவு நீர் பல்வேறு வீதிகளில் வழிந்தோடுகிறது. இதனால், பொதுமக்கள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாதாளச் சாக்கடை குறித்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமையில் வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில்,மேலும் சாலைகளில் ஒரு சில இடங்களில் பள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டிருந்தார்.