போதைக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள் - வேதனை தெரிவிக்கும் ஆசிரியர்கள்! மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளை புறக்கணித்து விட்டு அனபாண்டு போதை, கூல் லிப், கஞ்சா போன்ற போதைக்கு அடிமையாகி பூங்காக்களில் தஞ்சமடைந்து விடுகின்றனர். இவ்வாறான மாணவர்களை விரட்டிப் பிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும், சிறிதளவு தண்டிப்பதற்கு கூட உரிமை இல்லாத காரணத்தால் மாணவர்களை திருத்துவதற்கு வழியில்லாமல் ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்காத நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மட்டும் கூட்டம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சுவர் ஏறி குதித்து வகுப்புகளை கட் அடித்து விட்டு பூங்காக்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்கள், கடற்கரைகள், பாழடைந்த மண்டபங்களில் சுற்றித் திரிகின்றனர்.
மேலும் பிளக்ஸ் "டிஜிட்டல் பேனர்கள் மற்றும் சுவர்களில் ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அனபாண்டை ஒரு குழலில் அடைத்து அதனை குலுக்கி அதில் உருவாகும் காற்றை சுவாசித்து அதன் மூலம் புதுவிதமான போதையை ஏற்றிக் கொள்கின்றனர். அதுமட்டுமன்றி அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கும் அடிமையாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் இன்று பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்காவில் போதை மயக்கத்தில் இருந்த போது, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் என்பவரும், உதவிக்கு மற்றொரு ஆசிரியருடன் இருசக்கர வாகனத்தில் வந்து மாணவர்களை விரட்டி பிடித்து பள்ளிக்கு அழைத்து சென்றார். அதிலும் பாதி மாணவர்கள் ஆசிரியரை கண்டவுடன் பூங்கா சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி சென்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, அரசு பள்ளிகளில் வெளியூரில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் வந்து பயில்கின்றனர். அவர்கள் படிப்பு குறித்து பெற்றோர் எந்த அக்கறையும் காட்டாத நிலையில், ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் தண்டனை மாணவர்களுக்கு வழங்கும் விதத்தில் அரசு விதிகளை திருத்த வேண்டும் என்றும், தட்டிக் கேட்கும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் சம்பவமும் நடந்து வருவதாகவும், பூங்காக்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல்துறையினர் தினமும் ஒரு முறை ரோந்து பணியில் ஈடுபட்டு சுற்றி திரியும் பள்ளி மாணவர்களை அழைத்து அறிவுரை கூறி பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், புதுவித போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் உள்ளாகாமல் தடுக்க மனரீதியான கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பா? - பெங்களூருவில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!