மயிலாடுதுறை:கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை(நவ.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று(நவ.13) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்கு அதிதீவிர கனமழை மற்றும் கடல் அலையின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதையடுத்து, மயிலாடுதுறை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று(நவ.13) காலை முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மிதமான மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், பழையாறு, சந்திரபாடி, கொடியம்பாளையம், சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வானகிரி உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று(13.11.2023) முதல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அவர்களது படகு மற்றும் உபகரணங்களைப் பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவிப்பு விடுத்துள்ளார்.
மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (14.11.2023) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து.. கங்கொலியில் 11 படகுகள் எரிந்து சேதம்!