மயிலாடுதுறை:சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், கடந்த மாதம் 30-ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 4-வது தேசிய அளவிலான யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்-2022 போட்டி நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 1000 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டுஉறைவிடப் பள்ளியைச் சேர்ந்த நரிக்குறவ மாணவர்கள் 14 பேரும், திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நீடு அறக்கட்டளை உதவியுடன் படிக்கும் ஒரு நரிக்குறவ மாணவர் உள்ளிட்ட 2 மாணவர்களும் பங்கேற்றனர்.
பரிசுகளை அள்ளிய மாணவர்கள்:இதில், 6 பேர் இரு பிரிவுகளில் பரிசு பெற்றுள்ளனர். பல்லவராயன்பேட்டை உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களில், 11 முதல் 13 வயது வரையிலான பிரிவில் 7-ஆம் வகுப்பு மாணவர் நவீன்ராஜ் முதல் பரிசை வென்றார். மேலும், மாணவர்கள் சாமுவேல், சஞ்சனா ஆகியோர் இரண்டாம் பரிசினையும், மகாலட்சுமி என்ற 2-ஆம் வகுப்பு மாணவி மூன்றாம் பரிசையும் வென்றனர்.