ஆக்கிரமிப்புகளை அகற்றிய மயிலாடுதுறை நகராட்சி - மயிலாடுதுறை நகராட்சி
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் நெரிசல்மிக்க பிரதான சாலைப் பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நகராட்சி சார்பில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வண்டிக்காரத் தெரு, பட்டமங்கலத்தெரு, கச்சேரி சாலை, காந்திஜி சாலை ஆகியன போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகள் ஆகும்.
இந்த பகுதிகளில் வியாபாரிகளால் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை நகராட்சி அலுவலர்கள் வருடாவருடம் அகற்றுவதும், அதன்பின் சில நாட்களிலேயே மீண்டும் அந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும் தொடர்கதையாகி உள்ளது.
நகரில் ஆக்கிரமிப்பு செய்யப்படும் தகவல் கசிந்ததுமே, தானாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடும் வியாபாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முடிந்த மறுநாளே மீண்டும் பழையபடி ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றனர்.
இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நகரின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நகராட்சி சார்பில் தற்போது நடைபெற்று வருகிறது.