மயிலாடுதுறை:நான்கு ஆண்டுகளாகக் காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால் காதலி எறும்பு மருந்தைக் கரைத்துக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் முத்தையன் மகள் துர்க்காதேவி (30). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் ஆடிட்டர் ஒருவரிடம் தணிக்கை உதவியாளராகப் பணிபுரிந்தார். அப்போது மயிலாடுதுறையில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராகப் பணியாற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நான்கு ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளனர்.
நிச்சயம் செய்த குடும்பத்தினர்
இரு வீட்டாரும் பேசி திருமண நிச்சயம் செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென துர்காதேவியைத் திருமணம் செய்ய ராஜேஷ், அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளதாக துர்க்காதேவி குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தற்போது ராஜேஷ் பணிமாறுதலாகி செம்பனார்கோவில் வங்கிக்கிளையில் பணியாற்றிவரும் நிலையில் அங்கு அவரைப் பார்க்கச் சென்ற துர்காதேவிக்கும், ராஜேஷுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இருதரப்பினரையும் காவல் துறையினர் சமரசம் பேசி அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில், பல ஆண் நண்பர்களுடன் பேசியதால் மனக்கசப்பு ஏற்பட்டு தன்னிடம் பேசாமல் இருந்ததாகவும், பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் உள்ளதாகவும், கடன் வாங்கியவர்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படியும் துர்காதேவிக்கு ராஜேஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.