மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரைச் சேர்ந்த செல்வசாமி மகன் ஆகாஷ் (17) என்ற சிறுவன், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 5) அன்று தலைச்சங்காடு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்ந்து 3 நாள்கள் ஆனபோதும், அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் அறுவை சிகிச்சை செய்ததோடு, மேல் சிகிச்சைக்கும் பரிந்துரைக்காமல் மருத்துவமனையிலேயே அலைக்கழித்ததாக கூறி ஆகாஷின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அக்கட்சி பொறுப்பாளர் துரைராஜ் தலைமையில் மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியல் இந்நிலையில், உடனடியாக ஆகாஷை மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கக் கோரினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாத்துரை தலைமையிலான காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆகாஷ் நலமாக உள்ளதாகவும் நாளை அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனைத்து வசதிகளும் இங்குள்ளபோது மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்க தேவையில்லை என்றும் பணியில் இருந்த மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்ததால் போராட்டம் தொடர்ந்தது.
தலைமை மருத்துவர் ராஜசேகர் உள்ளிட்ட மருத்துவர்கள் செல்போனை தொடர்பு கொள்ள முடியாததால், 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தது. தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக மேல்சிகிச்சைக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அனுமதியளித்ததை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கோவையில் தண்ணீர் தொட்டியில் அக்கா,தம்பி சடலமாக மீட்பு!