மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மயிலாடுதுறை: தமிழகத்தில் அண்மையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தற்போது தீவிரமடைந்து உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று (நவ. 4) சுமார் 18 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பருவமழை முன்னெச்சரிக்கையாக 12 பேரிடா் மீட்புப் படைக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளதாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளாா். தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 4ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த அல்லது மிக பலத்த மழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகா், திருப்பூா், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
மேலும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
விடிய விடிய மழை பெய்த காரணத்தால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ. 4) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதேபோல சென்னை, சிவகங்கை, நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி : சென்னை, சிவகங்கை, நெல்லை, குமரி, தேனி என தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!