மயிலாடுதுறை: பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தங்கி இரவுநேர காவலராக பணியாற்றிவந்த செங்கமேட்டுத் தெருவை சேர்ந்த சாமிநாதன்(55) என்பவரை, கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி கோயிலில் சுவர் ஏறி குதித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கியிருந்தார். பின்னர் அவர் கோயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பீரோ மற்றும் சில்வர் உண்டியலை உடைத்தபோது உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் தப்பி ஓடினார்.
படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சாமிநாதன் மே மாதம் 14ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை கொண்டு அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவந்தனர். 6 மாதங்கள் ஆகியும் குற்றவாளி பிடிபடாததால் குற்றவாளி போட்டோவை காவல் துறையினர் வெளியிட்டு, குற்றவாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு சிறை சென்று விடுதலையானவர்கள் குறித்தும், சிறைதண்டனையில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.