மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவர் கர்ப்பிணியான தனது மனைவி தமிழ்வாணியை (30) பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மதியம் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, கற்கோயில் உடையாம்பாளையம் என்ற இடத்தில் எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் தமிழ்வாணியும், அவரது கணவர் புருஷோத்தமனும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
தொடர்ந்து வேகமாகச் சென்ற கார் 100 நாள் வேலை முடித்துவிட்டு சாலையோரம் நடந்துசென்ற உடையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் மனைவி தையல்நாயகி (52), சந்திரகாசு மனைவி ராணி (60) ஆகியோர் மீது மோதியது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்த தையல்நாயகி, ராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், வழியிலேயே தையல்நாயகி உயிரிழந்தார். ராணி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஓட்டுநரின் அஜாக்கிரதையால் கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி தமிழ்வாணி, புருஷோத்தமன், தையல்நாயகி ஆகிய மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வைத்தீஸ்வரன் கோயில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், தப்பியோடிய கார் ஓட்டுநரையும் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை: மனித உரிமை ஆணையர் விசாரணை'