மயிலாடுதுறை:இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உயரிய போட்டியான தேசிய விளையாட்டுப் போட்டியின் 37 -வது போட்டி, கோவாவில் உள்ள பேம்போலிம் ஸ்டேடியத்தில் நேற்று (நவ.01) புதன்கிழமை நடைபெற்றது.
இதில், போல் வால்ட் (Pole Vault) எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க, இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகளும் விண்ணப்பித்த நிலையில், அதில் இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் மூலமாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்த வகையில், இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் பரணிகா (26), தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவர் 3.90 மீட்டர் உயரம் தாண்டி இந்த வெற்றியைப் பெற்றார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றி வரும் பரணிகாவுக்கு, பயிற்சியாளர் மில்பர், ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாராட்டுகளைத் தெரிவித்தனர். பரணிகா ஏற்கெனவே தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், மாநிலங்களுக்கு இடையிலான 61 -வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ( இன்டர் - ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022 ) சாதனை படைத்துள்ளார்.
இந்த சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 10 -ஆம் தேதி, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், போட்டியில் பரணிகா 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையைப் படைத்தார்.