கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதில் பல்வேறு விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. அந்த வகையில் விநாயகரின் உயரமான சிலைகளை விற்பனைசெய்யும் இடங்களில் காவல் துறையினர் கண்காணித்துவருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தில் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனையகத்தில் சிறிய அளவிலான விநாயகர் பொம்மைகள் முதல் பத்து அடி உயர சிலைகள் வரை விற்பனைக்காக கொண்டுவரப்பட்டவை தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக விற்க வழியின்றி இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்ற இந்து முன்னணியினர்! இங்கு இரண்டு அடி உயரத்துக்கு அதிகமான சிலைகளை விற்பனை செய்ய காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் அங்கு வந்த இந்து முன்னணி நகர தலைவர் சுவாமிநாதன், பாஜக பிரமுகர் நாஞ்சில்பாலு ஆகியோர் மூன்று அடி சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி உள்ளதாகக் கூறி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செம்பனார்கோயில் காவல் ஆய்வாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளர் அனந்தபத்மநாபன், மூன்று அடி சிலைகளைக் கொண்டுசெல்ல அனுமதி வழங்கினார்.
இதையும் படிங்க:ஊரடங்கால் 'விலைபோகாத விநாயகர் சிலைகள்' சிறப்புத் தொகுப்பு!