நாகை மாவட்டம், மயிலாடுதுறை அக்களூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், சித்தர்காடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவரிடம் ஒரு நபர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்க சிவக்குமார் மறுத்ததால் கையில் வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தியுள்ளார்.
இதில் காயம் அடைந்த சிவக்குமார், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சீர்காழி தாலுக்கா தொடுவாய் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (32) என்பவர்தான் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், நாகராஜனை தேடிவந்தனர். இந்நிலையில், மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் கோயில் அருகே அவர் தலைமறைவாகியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரைக் கைது செய்ய காவல் துறையினர் முயற்சித்தபோது, தப்பியோட முயன்ற நாகராஜன், பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.