18 ஆண்டுகளுக்கு பின் நடந்த மாயூரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு மிகத் தொன்மை வாய்ந்த பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மாயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயம் தேவாரப் பாடல், சமயகுறவர்களால் பாடல் பாடப்பட்ட ஸ்தலமாகும்.
அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்து மயில் உரு நீங்கி சாபவிமோசனம் அடைந்ததாக இந்த திருத்தலத்தின் புராணம் கூறுகிறது. 160 அடி உயரத்தில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் அமையப்பெற்ற கோயிலாகவும் இது காணப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்களால் 24வது குருமகா சன்னிதானம், ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகளின் சீரிய முயற்சியால் ஆலயம் முழுவதும் பழமை மாறாமல் சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய் கொண்டு புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டு திருப்பணி வேலைகள் நிறைவடைந்தன.
18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (செப். 3) மகாகும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலையில் 123 குண்டங்கள் அமைக்கப்பட்டு மயிலாடுதுறை புகழ்பெற்ற காவிரி துலா கட்ட ரிஷப தீர்த்தத்தில் வேதியர்கள் மந்திரம் முழங்க கடங்களில் புனித நீர் நிரப்பபட்டது.
இதையும் படிங்க:கிருஷ்ண ஜெயந்தி விழா... தங்க கருட வாகனத்தில் காட்சியளித்த ஸ்ரீ கிருஷ்ணரை பக்தர்கள் தரிசனம்!
கங்கை, யமுனா, சரஸ்வதி, சிந்து, கோதாவரி, நர்மதை, துங்கபத்ரா, மனோன்மனி ஆகிய ஆறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் 9 கடங்களில் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி புதன்கிழமை காலை முதல் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது.
கடந்த 5 நாட்களாக சிவநெறி சொற்பொழிவுகள், இன்னிசை மற்றும் பரதநாட்டிய கச்சேரி, 82 மணி நேரம் தொடர்ச்சியாக அகண்ட பாராயணம் ஆகிய பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. கும்பாபிஷேக தினமான இன்று (செப் 3) 8ஆம் கால யாகசாலை பூஜை திருவாடுதுறை ஆதினமடாதிபதி முன்னிலையில் நிறைவுற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூராணஹுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்கள் ஒலிக்க சிவாச்சாரியார்களால் கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்து விமான கோபுர கலத்தை அடைந்தது. பின்னர், ட்ரோன் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், சிவனடியார்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், டிஐஜி ஜெயசந்திரன் மேற்பார்வையில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை அடங்கிய போலீசார் 508 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேக விழாவில் அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே கோயில் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Weekly Rasipalan: செப்டம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்! இதோ 12 ராசிகளின் பலன்கள் இங்கே!