இந்தியாவில் ரயில்வழிப் பாதையை முழுவதுமாக மின்மயமாக்க ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்தது. இதனை அடுத்து அனைத்து ரயில்பாதைகளையும் மின்மயமாக்கும் பணிகளை ரயில்வே துறை துரிதப்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், மத்திய அரசின் ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் விழுப்புரத்திலிருந்து, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் வரை ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 228 கி.மீ தூரம் கொண்ட ரயில்வே பாதைகளை மின்யமாக்கும் பணிகளைச் செய்துவருகிறது.
தற்போது விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர் வரை மின்யமாக்கும் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் வரையிலான 70 கி.மீ. தூரம் மின்யமாக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபைக்குமார்ராஜ் தலைமையில் அத்துறை அலுவலர்கள் சிலர், ரயில் பாதைகளை ஆய்வுச்செய்தனர். இன்று (புதன்கிழமை) மாலை 4.50 மணி அளவில், மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.