புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுரேஷ். இவர் மாணவர்களுக்கு கணிதப் பாடத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என எண்ணி, கணித பாட்டுப் போட்டி, கணிதக் கண்காட்சி, நாடகம் எனப் பல்வேறு புதிய முறைகளைக் கையாண்டு கற்பித்துவருகிறார்.
பூவைக் கொண்டு கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் அந்த வகையில் தற்போது பூவைக் கொண்டு கணித வடிவங்களை வரைந்து, அதன்மூலம் மாணவர்களுக்கு கணிதம் சொல்லித் தருகிறார். இது குறித்து ஆசிரியர் சுரேஷ் கூறுகையில், "மாணவர்களுக்கு கணிதப் பாடத்தை எளிமையாகப் புரியவைக்க வேண்டும் என்பதற்காக, புதிய புதிய முயற்சிகளைக் கையாண்டுவருகிறேன்.
அதன் ஒன்றாக எங்கள் வீட்டில் அதிக அளவில் பூக்கும் பவள மல்லி பூவைக் கொண்டு கணித கருத்துகளை அமைத்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். அதன்மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும்போது ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என எனக்குத் தோன்றியது.
பூவைக் கொண்டு கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் அதனடிப்படையில் பவள மல்லி, அரளி, சங்குப் பூவைப் பயன்படுத்தி கணித கருத்துகளை வரைந்து, அதனை மினி புரஜெக்டர் மூலம் வகுப்பில் காட்சிப்படுத்தினேன். அதனைக் கண்ட 10ஆம் வகுப்பு மாணவர்களின் முகத்தில் ஒருவித மலர்ச்சியைக் காண முடிந்தது. மேலும், மாணவர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனால் அம்முறையை தற்போது கற்பித்தலில் தொடர்ந்து பயன்படுத்திவருகிறேன்.
பூவைக் கொண்டு கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களுக்கு கணிதப் பாடம் என்றாலே ஒருவித சோர்வும், தயக்கமும் ஏற்படுவதுண்டு. ஆனால் எனது வகுப்பில் மாணவர்கள் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் கணிதப் பாடம் கற்கின்றனர். இப்படியான வித்தியாசமான முறைகளைக் கையாளும்போது மாணவர்கள் பாடத்தை மறப்பதற்கும் வாய்ப்பில்லை. கணிதம் மட்டுமின்றி அனைத்துப் பாடங்களையும் இவ்வாறு முயற்சிக்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.