மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா, திருமணஞ்சேரியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்திபெற்ற உத்வாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.
சிவபெருமான் கல்யாணசுந்தர மூர்த்தியாக கோகிலாம்பாள் அம்பிகையைத் திருமணம் செய்துகொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என அழைக்கப்படுகிறது. அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாசி மகப்பெருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது.
மாசி மகப்பெருவிழா
இந்நிலையில் பலரது தொடர் முயற்சியின் காரணமாக, இந்த ஆண்டு கோயிலில் மீண்டும் மாசி மகப்பெருவிழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, நேற்று (பிப். 7) அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, கிராமதேவதை கல்யாண மாரியம்மன் உற்சவம் ஆகியவை நடைபெற்றது.
இன்று (பிப். 8) காலை விநாயகர் புறப்பாடு செய்யப்பட்டு துவஜாரோகணம் என சொல்லப்படும் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்துடன் தொடக்கம்
பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, ஆய்வாளர் ஹரிசங்கரன், செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாசி மகப்பெருவிழாவை முன்னிட்டு தினசரி காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி வீதி உலா நடைபெறும். வருகிற 12ஆம் தேதி கோபுர தரிசனமும் 16ஆம் தேதி திருத்தேரோட்டமும் 17ஆம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன. இந்த உற்சவமானது பிப்ரவரி 18ஆம் தேதி நிறைவடைகிறது.
இதையும் படிங்க:மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு!